பிரதோஷம் பற்றிய குறிப்பு:
சைவர்களால் தமிழகமெங்கும் பட்சவிழாவாய்(அரைமாத விழா) சிறப்பாய் கொண்டாடப்பட்டு வருவது பிரதோஷ விழாவாகும். தமிழகமெங்கும் சிவாலயங்களில் சிறப்பாய் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. நந்தியின் செருக்கை அடக்க, இருகொம்பின் இடையே நின்று ஆடல்வல்லனான ஈசன் ஆடிய வேளையே பிரதோஷம் என கடைபிடிக்கப்படுகிறது.
பிரதோஷ வேளையில் ஈசனின் நடனத்தை தரிசிப்பதற்காக தேவர்களும், கணங்களும், கூடிநின்று அக்காட்சியை காணவருகின்றனர், என புராணம் கூறுகிறது. அவ்வேளையில் ஈசனை தரிசித்தால், அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, எனவே அந்நாட்களில் கூட்டம் அள்ளும். இப்பிரதோஷம் குறித்து நெல்லை மாவட்டத்தில் மூன்று கோவில் கல்வெட்டுகளில் குறிப்புகள் கிடைக்கிறது.
திருப்புடைமருதூர் கல்வெட்டு:
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்புடைமருதூரில் 15ம் நூற்றாண்டு கல்வெட்டு, 1485(கொல்லம் 661) ம் ஆண்டு மார்கழி 17 முதல் தொடர்ச்சியாக பிரதோஷ விழா நடத்தவும், அவ்வேளையில் ஈசனுக்கு படைக்க பணியாரம், கறியமுது, மிளகமுது, உப்பு, எண்ணெய் ஆகியவை வாங்க பிரதோஷம் ஒன்றிற்கு இருநாழி அரிசியை "வீரகேரளன் குட்டி" என்பவர் அளித்துள்ளார். மேலும் அவ்வேளையில் விரதமுடிந்து வரும் பக்தர்களின் விரதத்தை முடிக்க நீராகாரமும் கொடுத்து அறமாற்றியுள்ளார்.
நத்தம் கோவில் கல்வெட்டு:
திருநெல்வேலி மாவட்டம் நத்தம் அக்னீஸ்வரர் கோவிலில், கி.பி 1512 ம் ஆண்டுகல்வெட்டு, மலை மண்டலத்தை சேர்ந்த, பனையன் விக்ரம நாகன் எனும் பிணையரய பண்டாரம், பிரதோஷ பூஜைக்கு 22 பணம் தானமளித்துள்ளார். இக்கல்வெட்டில் மேலும் ஒரு சிறப்பாக பிரதோஷத்தை,,"பிரதோழம்" என தமிழ்ப்படுத்தியுள்ளனர். இந்த 22 பணத்தையும், மாதம் இரண்டு பிரதோஷ பூஜைக்கும், மேலும் ஐந்து பணம் சந்தியாவிளக்கு ஏற்றவும் அளித்துள்ளார்.
நெல்லையப்பர் கோவில் கல்வெட்டு:
1887 ம் ஆண்டு நெல்லயப்பர் கோவில் கல்வெட்டு தொடர்ச்சியாய் பிரதோஷம் நடக்க மாதம் ஒன்றிற்கு 2,1/2 பணம் வீதம், பணம் கொடுத்து, கோடகநல்லூர் என்ற ஊரில் 60 சென்ட் நிலமும் தானமளிக்கப்பட்டுள்ள தகவலை தருகிறது. இவ்வறத்தை "மகாராஜா பிள்ளை" என்பவர் செய்துள்ளார். இதன் பின்னர் இவரை "பிரதோஷ மகாராஜா பிள்ளை" என இவரை அழைத்துள்ளது தெரிகிறது.
தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏



