Monday, 28 March 2022

பாண்டியனுக்கு ராஜ்ஜியம் வழங்கிய ஈசர்

 பாண்டியனுக்கு ராஜ்ஜியம் வழங்கிய ஈசர்:


கி.பி 956 ம் ஆண்டு வெட்டப்பட்ட இந்தகல்வெட்டு "சோழன்தலைகொண்ட வீரபாண்டியன்" என்ற சிறப்பு பெயர் கொண்ட பாண்டியரின் கல்வெட்டு இது.இக்கல்வெட்டு இன்றைய உசிலம்பட்டி வட்டத்திலுள்ள "ஆனையூர்" எனும் ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் எனும் கோவிலில்உள்ளது. இவ்வூர் அன்று திருகுருமுள்ளூர் எனவும்,இறைவன் திருஅக்னீஸ்வரமுடையார் எனவும் அழைக்கப்பட்டுள்ளார்.


இவ்வூர் இறைவனான திருஅக்னீஸ்வரர் தனக்கு ராஜ்யத்தை தந்தருளின நாயனார் என குறிப்பிடுகிறார்.சோழனான முதலாம் பராந்தகர் காலத்தில், மதுரை சோழர் வசமானது.அதன்பின் வீரபாண்டியன் சோழரை வென்று,மீண்டும் பாண்டியராட்சியை நிறுவுகிறார்.இந்த ஊர் இறைவனை வேண்டியதால்,அவருக்கு ராஜ்ஜியம் கிடைத்ததாய் இக்கல்வெட்டு வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.ஆகவே இவ்வூர் இறைவனுக்கு நிறைய நிவந்தங்கள் அளித்து,அதற்கு ஈடாக நிறைய நிலங்களையும் அளித்துள்ளார்.


மங்கையர்க்கரசியார் மூலமாக,சம்பந்தர் வாயிலாக பரவிய சைவமதம் மதுரைக்கு மேற்கே பல இடங்களில் பரவி செழித்தது. நால்வர் பாண்டியநாட்டில் நிறைய தேவாரங்களை பாடியுள்ளனர். ஆனால் உசிலம்பட்டி, தேனி பகுதிகளில் மட்டும் பாடல்பெற்ற தலங்கள் ஒன்று கூட இதுவரை இல்லை. ஒருவேளை இப்பகுதியில் நாட்டார்வழிபாட்டின் தாக்கம் அல்லது தொன்மம் காரணமாக வைதீகமதம்,மிகதாமதாக 10ம் நூற்றாண்டு வாக்கில்தான் இப்பகுதியில் நிலைபெற ஆரம்பித்ததா எனவும் அறியமுடியவில்லை. மாணிக்கவாசகர் கூட மதுரை அருகே திருவாதவூர்தான். அவர்கூட இங்கு தமது திருவாசகத்தை இப்பகுதியில் பாடாதது நோக்கத்தக்கது.