Monday, 28 September 2020

பிரதோஷம் பற்றிய குறிப்பு

 பிரதோஷம் பற்றிய குறிப்பு:


சைவர்களால் தமிழகமெங்கும் பட்சவிழாவாய்(அரைமாத விழா) சிறப்பாய் கொண்டாடப்பட்டு வருவது பிரதோஷ விழாவாகும். தமிழகமெங்கும் சிவாலயங்களில் சிறப்பாய் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. நந்தியின் செருக்கை அடக்க, இருகொம்பின் இடையே நின்று ஆடல்வல்லனான ஈசன் ஆடிய வேளையே பிரதோஷம் என கடைபிடிக்கப்படுகிறது.

பிரதோஷ வேளையில் ஈசனின் நடனத்தை தரிசிப்பதற்காக தேவர்களும், கணங்களும், கூடிநின்று அக்காட்சியை காணவருகின்றனர், என புராணம் கூறுகிறது. அவ்வேளையில் ஈசனை தரிசித்தால், அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, எனவே அந்நாட்களில் கூட்டம் அள்ளும். இப்பிரதோஷம் குறித்து நெல்லை மாவட்டத்தில் மூன்று கோவில் கல்வெட்டுகளில் குறிப்புகள் கிடைக்கிறது.


திருப்புடைமருதூர் கல்வெட்டு:


திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்புடைமருதூரில் 15ம் நூற்றாண்டு கல்வெட்டு, 1485(கொல்லம் 661) ம் ஆண்டு மார்கழி 17 முதல் தொடர்ச்சியாக பிரதோஷ விழா நடத்தவும், அவ்வேளையில் ஈசனுக்கு படைக்க பணியாரம், கறியமுது, மிளகமுது, உப்பு, எண்ணெய் ஆகியவை வாங்க பிரதோஷம் ஒன்றிற்கு இருநாழி அரிசியை "வீரகேரளன் குட்டி" என்பவர் அளித்துள்ளார். மேலும் அவ்வேளையில் விரதமுடிந்து வரும் பக்தர்களின் விரதத்தை முடிக்க நீராகாரமும் கொடுத்து அறமாற்றியுள்ளார்.


நத்தம் கோவில் கல்வெட்டு:


திருநெல்வேலி மாவட்டம் நத்தம் அக்னீஸ்வரர் கோவிலில், கி.பி 1512 ம் ஆண்டுகல்வெட்டு, மலை மண்டலத்தை சேர்ந்த, பனையன் விக்ரம நாகன் எனும் பிணையரய பண்டாரம், பிரதோஷ பூஜைக்கு 22 பணம் தானமளித்துள்ளார். இக்கல்வெட்டில் மேலும் ஒரு சிறப்பாக பிரதோஷத்தை,,"பிரதோழம்" என தமிழ்ப்படுத்தியுள்ளனர். இந்த 22 பணத்தையும், மாதம் இரண்டு பிரதோஷ பூஜைக்கும், மேலும் ஐந்து பணம் சந்தியாவிளக்கு ஏற்றவும் அளித்துள்ளார்.


நெல்லையப்பர் கோவில் கல்வெட்டு:


1887 ம் ஆண்டு நெல்லயப்பர் கோவில் கல்வெட்டு தொடர்ச்சியாய் பிரதோஷம் நடக்க மாதம் ஒன்றிற்கு 2,1/2 பணம் வீதம், பணம் கொடுத்து, கோடகநல்லூர் என்ற ஊரில் 60 சென்ட் நிலமும் தானமளிக்கப்பட்டுள்ள தகவலை தருகிறது. இவ்வறத்தை "மகாராஜா பிள்ளை" என்பவர் செய்துள்ளார். இதன் பின்னர் இவரை "பிரதோஷ மகாராஜா பிள்ளை" என இவரை அழைத்துள்ளது தெரிகிறது.


தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏



Thursday, 24 September 2020

கல்வெட்டில் சிறு தீனி

 கல்வெட்டில் சிறு தீனி :


பணியாரம்:


பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டு ஒன்று, பணியாரம் செய்ய தேவையான பொருட்களை பற்றி கூறுகிறது.

"பணியாரம் செய்ய தேங்காய் கதலிப்பழம்,சீரகம்,மிளகு, சுக்கு, சர்க்கரை, ஆரஞ்சுப்பழம், கரும்பு என பழங்கள் வைத்து பணியாரம் செய்ததை கூறுகிறது.

அதற்குமுன் மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு, பணியாரம் செய்ய தேங்காயும், கருப்பட்டியையும் பயன்படுத்தியதை கூறுகிறது!


இன்று நாம் செய்யும் பணியாரம் இவ்வளவு ருசியாய் செய்வார்களா என்பது சந்தேகமே.


அதிரசம்:

இன்றும் நம் வீடுகளில் நொறுக்குதீனிகளில் முக்கிய இடம்பிடிப்பது, அதிரசமே! சில கோவில்களில் இறைவனுக்கு முக்கிய நிவந்தமாய் படைக்கப்படுகிறது! கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டு அதிரசம் செய்ய தேவையான பொருட்களை பட்டியலிடுகிறது! அதிரசம் செய்ய உபயோகப்படுத்திய அரிசிக்கு 'அதிரசப்படி' என பெயர். இதற்கென தனிவகை அரிசியை பயன்படுத்தியுள்ளனர்.

அதிரசம் செய்ய பயன்படும் பொருள்:

1.அதிரசப்படி-1 மரக்கால்

2.வெண்ணெய்-2நாழி

3.சர்க்கரை-100 பலம்

4.மிளகு-1 ஆழாக்கு

(இந்த அளவீடுகளை கூகுள் செய்து தெரிந்து கொள்க)


கும்மாயம்:


கும்மாயம் அல்லது பயிற்றுப்பொங்கல் குறித்து 10 ம் நூற்றாண்டு வரகுணபாண்டியன் காலத்து அம்பாசமுத்திரம் கல்வெட்டுகளில் பயின்று வருகிறது. இவ்வுணவை இன்றைய திருவையாறு புகழ் "அசோகா அல்வா"வுடன் ஒப்பிடலாம்.

கல்வெட்டில் இவ்வுணவு "கும்மாய பயிற்றுப் போகனம்" என அழைக்கப்பட்டுள்ளது.


Reference :

1.தென்னிந்திய கோவில் சாசனம்

2.கிருஷ்ணதேவராயர்கல்வெட்டுகள்

3.தமிழர் உணவு





Saturday, 29 August 2020

கண்தோஷம் நீக்கிய ஈசர்

 கண்தோஷம் நீக்கிய ஈசர்:

அக்காலத்தில் ஊருக்கு ஊர் தேவரடியார் இருந்தனர். ஒவ்வொரு கோவிலிலும் இறைத்தொண்டு ஆற்றினர். இன்றைய திருச்சி மாவட்டம் திருநெடுங்களம் அன்றைய கவிரநாட்டுக்குள் இருந்தது. இந்நாட்டின் கீழேயே மலையடிப்பட்டியும் இருந்தது. திருநெடுங்களத்தில் இருந்த தேவரடியார் பெண் ஒருவர், பூச்சிக்குடியை சேர்ந்த ஆவுடையத்தேவர் என்பவரிடம் தொடர்பில் இருந்தார். அப்பெண்ணிடம் அப்பகுதியில் இருந்த பிராமணர் ஒருவரும் இருந்தார். இதைகேள்விபட்டு ஆத்திரப்பட்ட ஆவுடையத்தேவர் அப்பெண்ணையும், அந்த பிராமணனையும் கொன்றுவிட்டு, மலையடிப்பட்டிக்கு தப்பிச்சென்று விடுகிறார். இக்கொலை பாவத்தால் அவருக்கு கண்பார்வை போய்விடுகிறது. அச்சமயம் முத்தரைய மன்னன் எழுப்பிய வாகீசர் எனும் சிவனை மனதில் எண்ணி, தன்னுடைய வயலில் ஒருபகுதியை வாகீசருக்கு தருவதாய் வேண்டிக்கொள்கிறார். அதிசயமாய் அவருக்கு பார்வை கிடைத்துவிடுகிறது. எனவே தான் நேர்ந்து கொண்டபடி தன்னுடைய வயலில் ஒருபகுதி வாகீசருக்கு அளித்துவிடுகிறார். இந்த வயலுக்கு எவரேனும் தீங்கு ஏற்படுத்தினால் அவர் கங்கைகரையிலே காராம்பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவார் என்று எழுதியும் வைத்துள்ளார். இச்சாசனம் மலைய்டிப்பட்டி குடைவரை கோவிலில் உள்ளது.





Wednesday, 26 August 2020

கல்வெட்டில் கிடாவெட்டு

  கல்வெட்டில் கிடாவெட்டு:


பட்டிகளில் அடைக்கப்படும் நூற்றுக்கணக்கான ஆடுகள் பல்கி பெருகவும், அவ்வினங்கள் நோய்நொடியின்றி இருக்கவும், அந்த பட்டியிலிருந்து ஒரு கிடாக்குட்டியை தேர்ந்தெடுத்து தத்தம் குலதெய்வங்களுக்கு  நேர்ந்துவிடுவர். பின் அக்கிடாக்குட்டி பெரிதானவுடன், அதற்கு ஒருநாள் குறித்து பலியிடுவர். உயிர்பலியிடும் இந்நிகழ்வு குறித்து புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகளில் பயின்று வருகிறது. அதுகுறித்து காண்போம். புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பனையூரில் கி.பி 1407 ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று, பொன்னன் கோவன் அழும்பன் என்பவர்  அவ்வூரில் சக்தி திருவிழாவிற்காக வண்டி வண்டியாய் கிடாக்களை ஏற்றி வந்து, அவற்றை  சந்து சந்திகளில் பலியிட்டுள்ளான். கலங்காத இவனது மனதை கண்ட ஊரார் இவருக்கு "கலங்காத கண்டக்கோன்" எனும் பட்டமளித்துள்ளனர்.


அதே புதுக்கோட்டையை சேர்ந்த 1628 ம் ஆண்டு ராங்கியம் கல்வெட்டு ஒன்று அங்குள்ள பிடாரி கோவிலில் கிடாய் பலியிட்ட செய்தியை கூறுகிறது.





Wednesday, 12 August 2020

கல்வெட்டுகளில் முஸ்லீம்கள்

 இந்து-முஸ்லீம் ஒருமைப்பாடு:

இந்து முஸ்லீம் என இரு மதத்தினரும் ஒருமைபாட்டுடன் இணைந்து, ஒருவருக்கொருவர் அறமாற்றியதற்கு அக்காலத்திய தமிழ்கல்வெட்டுகள் துணைபுரிகிறது. அவற்றுள் சிலவற்றை காண்போம்.

கல்வெட்டுகளில் முஸ்லீம்கள்:

ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோவிலுக்கு பலரும் தம் பங்கிற்கு உதவிபுரிந்துள்ளனர், அதில் தஞ்சை புறம்படி ராஜவித்யாதர பெருந்தெருவில் வாழ்ந்த "சோனகன் சாவூர் பரஞ்சோதி" எனும் இஸ்லாமியரும் ஒருவர். சோனகன் என்பது அராபியரை குறிக்கும் சொல். சாவூர் என்பதனை "ஜாஃபர்" என்பதன் தமிழ் வடிவமாய் கருதப்படுகிறது!சாவூர் என்பதை ஊராகவும் கருதுவர், ஆனால் அப்பெயரில் ஊர் எதுவும் அங்கு இல்லை. பரஞ்சோதி அவரது சிறப்புபெயர். இவர் இராஜேந்திரனின் திருமந்திர ஓலைநாயகமாகவும் பிற்காலத்தில் பணியாற்றியுள்ளார். பெருவுடையாருக்கு அளித்த அணிகலன்களில் "சோனகச்சிடுக்கு" என்பதும் ஒன்றாகும். ஆனைமங்கல செப்பேட்டில் "துருக்கன்" அமுதன் எனும் நபரின் பெயர் வருகிறது! 

குலசேகர பாண்டியனின் அமைச்சராக பிள்ளை பட்டமுடைய "தகியுடீன்" எனும் அமைச்சர் வருகிறார் இவர் சில கல்வெட்டுகளில் முதலியார் பட்டமும் பெற்றுள்ளார். 14 ம் நூற்றாண்டு சேர மன்னனான புகழ்பெற்ற உதயமார்த்தாண்டன் திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டனத்தில் "மக்தூம்பள்ளி" எனும் பள்ளிவாசலை ஏற்படுத்தி அதற்கு "உதயமார்த்தாண்ட பெரும்பள்ளி" என்று தன் பெயரை சூட்டுகிறார். அங்கு பணிபுரிந்த அபுபக்கர்காதியாருக்கு 'உதயமார்த்தாண்ட காதியார்' என பெயரும் இட்டான். மேலும் காயல்பட்டினத்தில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு எல்லாமதத்தினரும் நாலுபணத்திற்கு கால்பணம் இந்த பள்ளிவாசலுக்கு மகமையாக தர ஏற்பாடும் செய்துள்ளார். மதுரை கோரிப்பாளையம் ஒருகோல் சுல்தான் பள்ளிவாசலுக்கு 7ம் நூற்றாண்டைசேர்ந்த கூன்பாண்டியன் 14ஆயிரம் பொன்கொடுத்து சோளிகுடி, சொக்கிகுளம், வீவிகுளம்(பீபிகுளம்?) சிறுத்தூர், திருப்பாலை ஆகிய ஊர்களை தானமாய் அளித்ததாகவும், பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இதுதொடர்பாய் சர்ச்சை மூண்டு அதன்பின் வீரப்பநாயக்கர் பண்டைய ஆவணத்தை சரிபார்த்து பழையமுறையே தொடரசெய்ததாகவும் கல்வெட்டு ஒன்று இன்றும் அப்பள்ளிவாசலில் உள்ளது. அக்கல்வெட்டு "சிவமயம்" என்று தொடங்குவது விந்தை. தஞ்சை செவப்பநாயக்கர் நாஞ்சிக்கோட்டை கள்ளரான மண்ணையார்களை கொண்டு தஞ்சை சமுசுபீரு பள்ளிவாசலுக்கு 7 வேலி நிலம் அளிக்கச்செய்தார். மராத்தியர் காலத்தில் படைக்காகவும், யுனானி மருத்துவரத்திற்காகவும் நிறைய முஸ்ஸீம் குடியேற்றம் தஞ்சைபகுதியில் நிகழ்ந்துள்ளது. வடக்குஅலங்கம் படேஉசேன் தர்கா போன்ற பல நிறுவனங்கள் இன்றும் மராத்திய மன்னர் மேற்பார்வையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தஞ்சை முஸ்லீம்கள் குடும்பத்தினருக்கு மராத்தியர் அளித்த கொடைகள் பற்றி மோடிஆவணங்களில் ஏகப்பட்ட குறிப்புகள் உள்ளது. தொண்டி கைக்காளன் குளம் கலிங்கு மருதுபாண்டியரால் கட்டப்பட்டது. அப்போது அப்பகுதியின் நிர்வாகி அபூப் சகா மரைக்காயர் என்பவராவார்.

மெக்கன்சி ஆவணங்களில் முஸ்லீம்கள்:

காங்கேயம் பகுதி மன்றாடியார் குடும்பம் ஒன்றில் ஊனமுற்ற பெண் ஒருத்தி பிறந்தாள், அவளது சகோதரர்கள் சொத்தில் பங்களிக்க மறுக்கவே, "துலுக்க சருதார்" அமைப்பிடம் முறையிட அவர்கள் விசாரித்து, உரிய நிலம் பெற்றுதந்தனர். இக்கூற்றை மெக்கன்சி ஆவணமும், வெள்ளையம்மாள் காவியமும் உறுதிபடுத்துகிறது. ஸ்ரீரங்கம் கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் பரம்பரைக்கும், ரெங்காச்சாரியார் பரம்பரைக்கும் பத்து தலைமுறையாக, சில உரிமைகள் தொடர்பான பஞ்சாயத்தினை 1797 ல் ஆர்காடு நவாப் சாயபூ தீரவிசாரித்து பைசல் செய்து வைத்தார். 

இந்து கோவிலுக்கு உதவிய முஸ்லீம்கள்:

1758 ல் தஞ்சை மேலவீதி கொங்கணீஸ்வரர் கோவிலுக்கு பதினெட்டுபட்டாடைகளை மகமை குழுவினர் அளித்துள்ளனர். முகம்மதுராவுத்தர், மீராலெப்பை போன்றோர் இதில் அடங்குவர். விரிஞ்சிபுரம் சிவன்கோவில் தேர் மசூதிவழி செல்லுகையில் மசூதியின் சார்பில் சிறப்புபூசை நடைபெறுகிறது. கோவை குறிச்சி செல்லாண்டியம்மன் கோவிலுக்கு திப்புசுல்தான் கொடையளித்துள்ளார். மேலும் மின்னக்கல் கோபாலகிருஷ்ணன் கோவிலுக்கு 575 வராகன் சோடிகை மானியமளித்துள்ளார். அத்திவரதர் 1688ல் பாதுகாப்புகருதி உடையார்பாளயம் காட்டுப்பகுதிக்கு வந்தார். அவரது அழகில் மயங்கிய பாளையக்காரர் அதை திருப்பியளிக்க மறுக்க, ஆத்தான் திருவேங்கட ராமானுஜ ஜீயர் கர்நாடக நவாபிற்கு வேண்டுகோள் அனுப்ப, அவரது "வேண்டுகோளை(!)" ஏற்று1710 மீண்டும் காஞ்சி வந்தடைந்தார் அத்திவரதர். நெல்லையப்பர்கோவிலில் இன்றும் வழிபாட்டிலுள்ள உமாமகேசுவரரை தானமளித்தவர் அசாருதீன். பனைமலை தாளகிரீசுவரர் கோவில் மண்டபம், படிஅமைத்தவர் நவாபு சடெல்லேகான் சாயுபு.

இவை கொஞ்சமே இன்னும் பெரிய பட்டியலே உள்ளது.


"யாதும் ஊரே யாவரும் கேளிர்"



சாவூர் பரஞ்சோதி 


Tuesday, 28 July 2020

பெருகமணி பரமேஸ்வரர்

பெருகமணி பரமேஸ்வரர்:
திருச்சி-குளித்தலை சாலையில் சிறுகமணிக்கு அருகேயுள்ள ஊர் பெருகமணி. ஆயிரம் வருடமுன்பு இவ்வூர் பெரியவெண்மணி என அழைக்கப்பட்டுள்ளது, இன்று மருவி பெருகமணி ஆகிவிட்டது. இவ்வூரில் பழமையான சிவாலயம் ஒன்று உள்ளது. பாழ்பட்டு கிடந்த கோவிலை ஊரார் சிலர் செப்பனிட்டு தற்போது வழிபடும் நிலையில் உள்ளது.
கோவில் அமைப்பு:
விமானம், வளாகம் இன்றி இன்று கருவறையுடன் மட்டுமே காட்சியளிக்கிறது இக்கோவில், தற்காலத்திய சுண்ணாம்பு பூச்சினால் கல்வெட்டுகள் அழிந்து மறைந்து, இரு கல்வெட்டுகள் மட்டுமே தற்சமயம் காணக்கிடைக்கிறது. மூன்று திசைகளிலும் கோட்டங்கள் காணப்படுகிறது. கோட்டத்தில் அன்றைய தெய்வங்கள் இல்லை, எங்கு எந்த அருங்காட்சியகத்தில் உள்ளதோ? அதற்கு மாற்றாய் இன்றையகால சிலைகள் வைத்துள்ளனர். மற்றபடி அன்றைய சோழர்கால கோவிலுக்கேற்ற உறுப்புகளுடன் முழுமைபெற்ற கோவிலாய் அன்று இருந்திருக்கும். சண்டிகேஸ்வரர் மற்றும் சிவலிங்கம் மட்டுமே அக்காலத்தவர்.
கல்வெட்டு செய்திகள்:
1.கருவறையின் வடக்கு தாங்குதளத்தில் கோப்பரகேசரி(உத்தமசோழன்?)பன்மரின் ஆட்சியாண்டு அறியமுடியாத ஓர் கல்வெட்டும் இரு துண்டு கல்வெட்டும் உள்ளது. இதில் இறைவன் பெருவெண்மணி பரமேஸ்வரர் என அழைக்கப்பட்டது தெரிகிறது. இறைவனின் வழிபாடு, மற்றும் படையலுக்கு நிலமளித்தசெய்தியும், அப்பகுதியில் இருந்த பிடாரிகோவில் ஒன்றையும் இக்கல்வெட்டுகள் கூறுகிறது.

2.இரண்டாம் கல்வெட்டு 14ம் நூற்றாண்டைச்சேர்ந்தநாயக்கர் கால கல்வெட்டாகும், வீரகம்பணஉடையாரின் கல்வெட்டு இது, இக்கல்வெட்டின் வாயிலாய் அன்று சோழர்காலத்தில் இருந்த வளநாடும், கூற்றமும் மாறாமல் அவ்வாறே நாயக்கர்காலம் வரையிலும் வழங்ப்பட்டதை பறைசாற்றுகிறது. இராஜகம்பீர வளநாடு சூரலூர் கூற்றத்தின் கீழ் இவ்வூர் அமைந்துள்ளதை கல்வெட்டு கூறுகிறது. சூரலூர் கூற்றம் என்பதூ பராந்தகர் காலம் முதல் வழங்கிவரும் பெயர், தஞ்சைபெரியகோவிலிற்கு மெய்காப்பாளர் ஒருவர் கூட இக்கூற்றத்திலிருந்து சென்றதை தஞ்சை கல்வெட்டுகள் எடுத்துரைக்கிறது. நாயக்கர் காலத்தில் இறைவன் திருவக்கீச்வரர் என அழைக்கப்படுகிறார். அதன் தொடர்ச்சியாய் இன்றுவரை இறைவன் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். பதினாலடிகோல் இங்கு நிலமளந்தகோலாக குறிக்கப்படுவது முக்கியமான ஓர்செய்தி. மழவதைரையன் பிறையான் என்பவரின் மகன் இங்கு ப்ரீதிதானம் என்ற ஓருவகை தானமளித்துள்ளார். நிறைய வாய்க்கால்கள் இக்கல்வெட்டில் குறிக்கப்படுகிறது.

பிரதோசம், சிவராத்திரி முதலிய நாட்களில் இக்கோவில் முக்கியத்துவம் பெற்றுவிளங்குகிறது. ஏனைய நாட்களில் ஆட்கள் வருவது அரிது.




அழுந்தியூர் குலோத்துங்க சோழ விண்ணகரம்


அழுந்தியூர் குலோத்துங்க சோழ விண்ணகரம்:
திருச்சி -விராலிமலை சாலையில் அமைந்துள்ள ஊர் அழுந்தூர்.அக்காலத்தில் அழிந்தியூர் என அழைக்கப்பட்டுள்ளது. செந்தலை கல்வெட்டில் முத்தரையர் சுவரன் மாறன் வென்றதாய் கூறும் அழிந்தியூர் இவ்வூரே ஆகும். இங்கு வரகுணீஸ்வரர் எனும் சிவன் கோவில் உள்ளது.

இப்பெயரை வைத்து இக்கோவில் இரண்டாம் வரகுணன் கால கோவில் என கருதலாம். அதன்பின்னர் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோவில் சீரமைக்கப்பட்டது.

இக்கோவிலில் உள்ள குலசேகரபாண்டியரின் 41ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று, இங்கிருந்த சுவடழிந்த குலோத்துங்கசோழ விண்ணகரம் எனும் கோவில் குறித்த குறிப்பொன்றை தருகிறது.
இங்கே படத்தில் காணும் சிலை 9ம் நூற்றாண்டின் ஆரம்பகால சிற்பமைதியில் உள்ளது. இக்கோவில் பின்னர் குலோத்துங்கன் காலத்தில் சீரமைக்கப்பட்டு "குலோத்துங்கசோழ விண்ணகரம்" என அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.


இன்று இக்கோவிலின் கட்டட அமைப்பு கிடைக்காவிடினும், இப்பெருமாள் சிலை மட்டுமே கிடைத்தது.
இச்சிலை இன்று திருச்சி தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.




ராஜராஜ விஜயம்

ராஜராஜ விஜயம்:
ராஜராஜசோழன் நினைவாய் ஸ்ரீராஜராஜநாடகம் எனும் நாடகமானது பெரியகோவிலில் நடைபெற்றுள்ளது, அதைபோன்றே

"ஸ்ரீராஜராஜவிஜயம்" எனும் ஓர் இலக்கியம் இயற்றப்பட்டு, அக்காலத்தில் திருவிழாநாட்களில் வாசிக்கப்பட்டுள்ளது. இதனை வாசிக்க ஆட்களையும் நியமித்துள்ளனர். 
எழுத்தமைதி வைத்து இக்கல்வெட்டு 11 ம் நூற்றாண்டாய் தெரிகிறது. ராஜராஜர் காலத்திலோ, அல்லது அதற்கடுத்த மன்னர்களாலோ தொடர்ந்து இந்நிகழ்வு நடந்திருக்கவேண்டும். துரதிருஷ்டவசமாய் இக்கல்வெட்டு தரும் தகவல்களை முழுமையாக அறிய இயலவில்லை. இன்று இக்கல்வெட்டு கோபுரத்தின் வெளிப்புற அடித்தளத்தில் மண்மூடி காட்சியளிக்கிறது.



இடம்: திருப்பூந்துருத்தி



இந்து-முஸ்லீம் ஒற்றுமையை கூறும் கல்வெட்டு

இந்து-முஸ்லீம் ஒற்றுமையை கூறும் கல்வெட்டு:
நவகிரக பரிகாரதலமான திருநாகேஸ்வரம் கோவிலின் உட்பகுதியில் "குன்று மாமுலையம்மன்" சன்னதி உள்ளது. இச்சன்னதியின் மூலையில் ஓர்பலகைக்கல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் இந்து-முஸ்லீம் மக்கள் ஒருங்கிணைந்து வழிபாடு நடத்திய தகவல் உள்ளது.
சகம்1705(கி.பி.1783) ஐ சேர்ந்த கல்வெட்டு இது. மொத்தம் 39 வரிகளையுடையது.இதில் திருநாகேஸ்வரத்தின் தெற்கு எல்லையான உப்பிலியப்பன் கோவில் முதல், வடக்கு எல்லையான ராவுத்தர்கடை வரை அரைக்காசு வீதம் மகமை வசூலித்து விளக்கெரித்துள்ளனர். இதில் இரண்டு கடைகளின் பணம் பள்ளிவாசலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இக்காரியம் நடைபெறுவதை ஒருவர் கண்காணிக்க வேண்டும்.நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களை முன்னரே கணக்கெடுத்து அவர்களுக்கு மரியாதை செய்யவேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.
இச்செயல்களுக்கு எவறேனும் இடையூறு செய்தால், அவர் இந்துவெனில் "கங்கைக் கரையில் காராம்பசுவை கொன்ற" தண்டனைக்கும், இஸ்லாமியரெனில் "மக்கா நகரில் செய்யக்கூடாததை செய்த தோஷத்திற்கு" ஆளாவார்கள், என்று கூறப்பட்டுள்ளது.
1783 ஐ போல இன்றும் இவ்விரு மதத்தினவரும் இணைந்து விளக்கெரிப்பது குறிப்பிடத்தக்கது.

Monday, 27 July 2020

நீரிழிவு நோய் தீர்த்த ஈசர்

நீரிழிவு நோய் தீர்த்த ஈசர்:
Title பார்த்து சிரிக்ககூடாது கல்வெட்டில் அப்படிதான் இருக்கு.
மடத்துக்குளம் (பழனியிலிருந்து கோவை செல்லும் NH 209 சாலை) என்னும் ஊரில் இருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள கடத்தூர் என்னும் கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ளது இக்கோவில், பெரும்பாலும் சிவாலயங்கள் நீர்நிலையொட்டியே அமைந்திருக்கும், இக்கோவிலும் அமராவதி ஆற்றங்கரையிலேயே அமைந்துள்ளது.
சுமார் 750 வருடம் முன்பு கொங்கு விக்ரமசோழன் ஆட்சியில், திரிபுவனசிங்கன் எனும் அரசியல்தலைவர், "பிரமேகம்" எனும் நோய் நீங்கியதற்காக நிலம்தானம் அளித்துள்ளார்.

(சித்தமருத்துவ குறிப்பின்படி "மேகநோய்" என்றால் சிறுநீரகதொடர்பான நோய்கள் என அறியப்படுகிறது.மேலும் இருபதிற்கும் மேற்ப்பட்ட சிறுநீரக(மேக) நோய்கள் உள்ளதென சித்தமருத்துவ நிகண்டுகள் கூறுகிறது! இதில் பிரமேகம் என்பதனை நீரிழிவு நோய் என சித்தமருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்) மருத்துவர்களால் போக்கமுடியாத நோயினை இறைவன் போக்குவார் என்ற நம்பிக்கை இன்றும் நம்மிடையே உள்ளது.தமிழகத்தில் மருந்தீஸ்வரர் என பெயரிடப்பட்ட சில கோவில்களும் உள்ளது. அப்பரின் குலைநோய் மருத்துவர்களால் நீக்கஇயலாது போய், பின் இறைவன் திருநீர்ரால் நீங்கியதனை இலக்கியத்தில் அறியலாம்.
கல்வெட்டு செய்தி:
கொங்குவிக்ரமசோழனின் ஆட்சியில், திரிபுவனசிங்கனுக்கு "பிரமேகம்"நோய்வந்து கடத்தூர் இறைவன் திருவருளால் நீங்குகிறது, இதனால் இறைவனின் இரவுவழிபாட்டிற்கோ அரிசிதானம் கொடுக்கிறான், இவ்வரிசி தொடர்ந்து கிடைக்க சில நிலங்களை தாரைவார்க்கிறான். இந்நிலம் உதயாதிச்ச சோழதேவன் என்பவன் துரோகியாய் மாறியதால், அவனிடமிருந்து பிடுங்கப்பட்ட அரசாங்க நிலம் ஆகும். இந்நிலத்திற்கான எல்லையும், வரிச்சலுகையும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த எல்லாஉரிமைகளையும் சேர்த்து, அரசின் ஆணைப்படி(திருமுகதிருவிள்ளம்) இறைவனுக்கு கொடுத்துள்ளார்.
மருந்தீஸ்வரர், என்ற கல்வெட்டு பெயர் இன்று மருவி, அர்ச்சுனேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மேலும் "தென்திருமணஞ்சேரி" என Extra கதை சேர்க்கப்பட்டு, திருமணத்தடை நீக்கும் தலமாய் மாறிவிட்டது.

ஏழூர் மோநலஞ் சாத்தன்

கர்நாடாவில் கல்வெட்டு பொறித்த தமிழன்:

நாமக்கல்-சேலம் சாலையில் உள்ளது ஏழூர். அப்பர் பாடிய வைப்புத்தலங்களில் இவ்வூர் கோவிலும் ஒன்று. இவ்வூரிலிருந்து ஓர் தச்சன் கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்திலுள்ள தமுட்டுகல் எனும் கிராமத்திற்கு சென்று கன்னட மற்றும் வடமொழி கல்வெட்டு ஒன்றினை வெட்டிக் கொடுத்துள்ளார்.  அந்த கல்வெட்டின் இடப்புற விளிம்பில் தனது பெயரையும் வட்டெழுத்தில் பொறித்துவிட்டு வந்துள்ளார் இந்த தச்சன்,

"ஏழூர் மோநலஞ் சாத்தன்" என்பது இந்த தச்சரின் பெயராகும். இக்கல்வெட்டு 5 ம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது.