Saturday, 19 February 2022

தாமரைப்பாக்கம் கல்வெட்டு

 கங்கபுரம் எனும் ஊரிலுள்ள வெள்ளாளன் தருப்பேறுடையான் தாழிகோனன் என்பவருக்கு, சங்கரத்தடியான்,பெரியான் என இரு மகன்கள் இருந்தனர்.இவர்கள் இருவருக்கும் ஒருமுறை சண்டை வர, இருவரும் தாக்கிக்கொண்டனர், இதில் அண்ணன் இறந்துவிடுகிறார்.

தன்மகன் செயலாள் ஆத்திரமடைந்த தருப்பேருடையார் அங்கிருந்த இராஜேந்திரசோழ சித்திரமேழி சபையிடம்(Local administration) தனது இளையமகன் மீது புகார் அளிக்கிறார். குற்றத்தின் தன்மையை சபை அலசிபார்க்கிறது. செய்தது கொலைக்குற்றம்தான், எனினும் இதில் புகார் அளித்த தந்தைக்கு குற்றமிழைத்த இளைய மகன் தவிர வேறு வாரிசும் கிடையாது, மேலும் அவர்களது குடும்பத்திற்கு நிலபுலன்கள் என சொத்துக்களும் கிடையாது, வயதான தம்பதியினரும் கூட, இம்மகனை விட்டால் அவர்களை பார்த்துகொள்வாரும் இல்லை.


எனவே இந்நிறைகுறைகுறைகளை அலசி ஆராய்ந்த சபை, அரை நந்தாவிளக்கு தாமரைபாக்கம் கோவிலுக்கு ஏற்றும்படி அரிய(?) தண்டனையை தீர்ப்பளிக்கின்றனர்.

இக்கல்வெட்டு இரண்டாம் ராஜேந்திரன் காலத்தையது. இத்தண்டனைக்கு சாட்சியாய் அவ்வூரிலுள்ள பதினொரு வெள்ளாளர்கள் சாட்சி கையொப்பமிடுகின்றனர்.


இடம்: தாமரைப்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம்.




Saturday, 5 February 2022

உலகமாதேவியார்

 உலகமாதேவியார்:


இராசராசருக்கு மனைவிமார்கள் கல்வெட்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 15 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். உலகமகா தேவியார், திட்டைப்பிரான் மகள் சோழ மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் முதலியோர் ஆவர். இவர்களை இராசராசன் ‘நம் பெண்டுகள்’ என்று கல்வெட்டில் குறித்துள்ளார்.இவர்களுள் உலகமாதேவியார் பெயரே கல்வெட்டுகளில் முதலில் குறிக்கப்பட்டுள்ளது. திருவிசலூரில் இராச ராசன் துலாபாரம் புக்கபோது பட்டத்தரசியான தந்திசக்தி விடங்கியார் இரணியகருப்பம் எனும் சடங்கினை செய்துள்ளார். உலகமாதேவியார் திருவையாற்றில் கற்றளி ஒன்று எடுத்து அதற்கு ‘உலகமாதேவீச்சரம்’ எனத் தம் பெயரிட்டார். இதனைக் குறிக்கும் கல்வெட்டில், உடையார் இராசராச தேவர் நம்பிராட்டியார் தந்திசக்தி விடங்கியாரான உலக மகா தேவியார் என கல்லில் வெட்டியுள்ளார். 

இவரது கல்வெட்டு தில்லைஸ்தானத்திலும்

,திருவையாற்றிலும் சமீபத்தில் கண்டோம். அவையே கீழுள்ளவை👇👇