Sunday, 30 January 2022

நின்றசீர் நெடுமாறன் கல்வெட்டு

 நின்றசீர் நெடுமாறன் கல்வெட்டு:


இவரின் காலம் கி.பி(640-690) முழுமையாக ஐம்பது ஆண்டுகாலம் ஆட்சி செலுத்தியுள்ளார். சீனப்பயணியான யுவான்சுவாங் தன் பயணக்குறிப்பில் அரிகேசிபாண்டியனையும் அவர்தந்தை செழியன் சேந்தனையும் குறாப்பிடுகிறார். களப்பிரரிடமிருந்து தமிழ்நாட்டை மீட்ட கடுங்கோன் பாண்டியனின் பேரனின் மகன் இவர்.இவரது இயற்பெயர் சேந்தன்மாறன் என்றும் அரிகேசரி நெடுமாறன் என்றும் அறியப்படுகிறது. சம்பந்தர் தம் பதிகங்களின் வாயிலாக, 'பஞ்சவன் தென்னன் பாண்டியர்'

'பங்கமில் தென்னன் பாண்டியர்'

'பார்த்திபன் தென்னன் பாண்டியர்' என்றும் இவரை அழைக்கிறார். தமிழோடு தொடர்புடையது பாண்டிய குலம் என்பதனை உணர்த்த 'தமிழ்ப்பாண்டியர்' என்றும் அழைக்கிறார்.

 திருவிளையாடற்புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் மட்டுமே இவரை 'கூன்பாண்டியன்' என அழைக்கிறார். 

அகப்பொருள் சிற்றிலக்கியங்களில் காலத்தால் முற்ப்பட்ட 'பாண்டியன்கோவை'யின் பாட்டுடைத்தலைவன் இம்மன்னனே! 

இப்பாடல்களின் வாயிலாய் காவிரிக்கு தெற்கே குமரிவரை இவரது நாடு பரவியிருந்ததும் இருபத்தைந்து இடங்களில் இவன் போர்நடத்தி வெற்றி கண்டுள்ளமையும் தெரிய வருகிறது! 

பல்லவர், சேரன் முதலியோரை முறையே சங்கைமங்கை,நெல்வேலி ஆகிய இடங்களில் பெருவெற்றி பெருகிறான்.

நெடுமாறன் காலத்தில் வாழ்ந்த சோழமன்னன் பெயர் 'மணிமுடிசோழன்' என அறியமுடிகிறது. சேரனது வஞ்சியோடு சோழனது உறந்தையும் வென்றான் என பாண்டியக்கோவை கூறுகிறது.


புகழ்பெற்ற இம்மன்னனின் கல்வெட்டு ஒன்று மதுரை திருமலைநாயக்கர் மகாலில் உள்ளது. அக்கல்வெட்டின் சிறப்பு கீழேயுள்ள படத்தில் உள்ளது.



Saturday, 29 January 2022

குடுமியான்மலை இசை கல்வெட்டு

 குடுமியான்மலை இசை கல்வெட்டு:


திருநலக்குன்றம் என்று முற்கால பாண்டியர் காலம் வரை வழங்கப்பெற்ற இவ்வூர்,பிற்கால சோழரான இரண்டாம் ராஜராஜன் காலத்தில் "சிகாநல்லூர்"என அழைக்கப்பட்டது,அதன்பின் புதுக்கோட்டையை ஆண்ட மல்லப்ப பல்லவராயர் காலமான 1625 வரையிலும் திருநலக்குன்றம்,சிகாநல்லூர் என மாறி,மாறி அழைக்கப்பட்டது. அதன்பின்னரே தற்போது அழைக்கப்படும் பெயரான குடுமியான்மலை என்ற பெயரிலேயே சுமார் 350 வருடங்களாய் அழைக்கப்படுகிறது.


குடுமியான்மலை குடைவரைக்கு தென்புரம் உள்ள சுவரில் க்ரந்த எழுத்துக்ளுடன் கூடிய கல்வெட்டுகள் உள்ளது.இக்கல்வெட்டு தமிழிசை குறித்த இலக்கணத்தினையும்,யாழினையும் கூறுவதாய் கருதப்படுகிறது. சித்தம் நமச்சிவாய எனும் சிவவணக்கத்தோடு இக்கல்வெட்டு ஆரம்பிக்கிறது.ஏழு தலைப்பில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.


1.மத்ய க்ராமே சதுஷ் பிரஹார ஸ்வராகமா

2.ஷட்ஜக்ராமே சதுஷ் பிரஹார ஸ்வராகமா

3.ஷாதவே க்ராமே சதுஷ் பிரஹார ஸ்வராகமா

4.ஸாதரிதே க்ராமே சதுஷ் பிரஹார ஸ்வராகமா

5.பஞ்சாம க்ராமே சதுஷ் பிரஹார ஸ்வராகமா

6.கைசிக க்ராமே சதுஷ் பிரஹார ஸ்வராகமா

7.கைசிகே க்ராமே சதுஷ் பிரஹார ஸ்வராகமா


இந்த ஏழு பகுதிகளும் அன்று நிலவிவந்த ராகங்கள் என்றும்,தென்னிந்திய இசையின் கிராமம்,ஜாதி என்ற அடிப்படை கூறுகள் என்ற கருத்துகளும் உள்ளது.ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் "சதுஷ் பிரஹார ஸ்வராகமா" என்று வருவதால் இவ்வாக்கியம் முழுமையாய் முற்றுபெற்றதை குறிப்பிடுகிறது.


"ருத்ராச்சார்ய சிஷ்யனே பரம மகேஷ்வரனே

ராக்ஞா சிஷ்ய ஹிதார்தம் க்ருத ஸ்வராகமா"


ருத்ராச்சார்யன் என்பவன் சிஷ்யனும் பரம மகேஷ்வரனுமான மன்னன் ஒருவனும் எக்காலத்திலும் நிலைக்கும் வண்ணம் சிஷ்யர்களின் நலன் கருதி இக்கல்வெட்டினை வெட்டினார் என அறிய முடிகிறது. பல்லவகிரந்த முறையை கொண்டு சிலகாலம் முன்புவரை மகேந்திரவர்மனே இக்கல்வெட்டினை வெட்டியதாய் முன்னர் கருதப்பட்டது.இக்கல்வெட்டு வெட்டப்பட்ட காலமான ஏழாம் நூற்றாண்டில் இப்பகுதியில் பல்லவர் ஆதிக்கம் குறைவு. எனவே பாண்டிய மன்னர்களோ அல்லது அவர்களின் ஆதிக்கத்தில் இப்பகுதியில் இருந்த வேளிர்கள் அல்லது குறுநில தலைவர்களோ இக்கல்வெட்டை வெட்டியிருக்க கூடும். அதற்கு சான்றாய் இப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படாத முற்கால குடைவரைகள் நிறைய உண்டு.


கல்வெட்டின் முடிவில் "எட்டிற்கும் ஏழிற்கும் இவை உரிய" என்று தமிழில் முடிகிறது! இந்த ஏழும்,எட்டும் வீணையில் உள்ள தந்தியாக குறிப்பிடப்படுகிறது.சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பண்ணல்,பரிவர்த்தனை, ஆராய்தல்,தைவரல்,செலவு,கைவுள்,விளையாட்டு,குறும்போக்கு என்ற எட்டு கரணங்களை இவை குறிப்பிடுவதாகவும் கருதப்படுகிறது! 


கி.பி4ம் நூற்றாண்டினதாய் கருதப்படும் பரதமுனிவரின் பரதஇசை நூலிற்கும்,13 ம் நூற்றாண்டை சேர்ந்த சங்கீதரத்னாகரத்திற்கும் இடைப்பட்ட. இசைகுறிப்புகள் பற்றி அறிந்துகொள்ள இக்கல்வெட்டு மிகப்பெரிய ஆதாரமாய் விளங்குகிறது, இந்திய அளவில் காலத்தால் முந்தைய இசைக்கல்வெட்டு இதுவேயாகும்.


"எட்டிற்கும் ஏழிற்கும் இவை உரிய"

இதுகுறித்து விரிவாய் பிரிதொரு பதிவில் காண்போம்.